ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் ஓடும் வாகனத்தில் 25 வயது இளம்பெண் ஒருவரை இரண்டு பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த திங்கள்கிழமை இரவு நடந்த இந்தச் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண் பின்னர் குருகுகிராம்-ஃபரிதாபாத் சாலையில் வேனில் இருந்து தூக்கி எறியப்பட்டுள்ளார். இத்தாக்குதலில் படுகாயமடைந்த அந்தப் பெண்ணின் முகத்தில் மட்டும் 12 தையல்கள் போடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே குற்றப்பிரிவு போலீசார் இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர். விசாரணையில், டிசம்பர் 29 அன்று தாயுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி தோழியின் வீட்டிற்குச் செல்ல முயன்றபோது, அந்தப் பெண் இந்தத் துயரத்திற்கு ஆளானது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
