மணல் கொள்ளையைத் தட்டிக்கேட்ட இளைஞருக்கு நேர்ந்த கதி: பாட்டிலால் குத்திக் கொடூரக் கொலை..! தமிழகத்தை உழுக்கிய பயங்கரம்…!

By Swetha on வைகாசி 9, 2026

Spread the love

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மணல் கடத்தலைத் தடுத்த கார்த்திக் என்ற இளைஞர், முன்விரோதம் காரணமாகக் கண்ணாடி பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இப்பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதைக் கார்த்திக் தொடர்ந்து தட்டிக் கேட்டு வந்ததாகவும், இதனால் மணல் கடத்தல் கும்பலுக்கும் அவருக்கும் இடையே ஏற்கனவே தகராறு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

சம்பவத்தன்று கார்த்திக் தனியாக இருப்பதை நோட்டமிட்ட மணல் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த கும்பல் மறைத்து வைத்திருந்த கண்ணாடி பாட்டிலால் கார்த்திக்கை சரமாரியாகக் குத்தியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

   

இந்தக் கொடூரச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள மணல் கடத்தல் கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மணல் கடத்தலைத் தட்டிக் கேட்ட இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.