கர்நாடக மாநிலம் எல்லாப்பூரில், திருமணத்திற்கு மறுத்த பெண்ணைப் பள்ளித் தோழனே கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 30 வயதான ரஞ்சிதா பானசோடே, தனது கணவரைப் பிரிந்து 10 வயது மகனுடன் தந்தை வீட்டில் வசித்துக் கொண்டு அரசுப் பள்ளியில் சமையல் உதவியாளராகப் பணியாற்றி வந்தார்.
ரஞ்சிதாவின் பள்ளி நண்பரான ரபீக் இமாம்சாபா என்பவர், அவரைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியுள்ளார். ஆனால் ரஞ்சிதா மற்றும் அவரது குடும்பத்தினர் இதற்குத் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த ரபீக், ரஞ்சிதா வேலை முடிந்து திரும்பும்போது அவரை கத்தியால் குத்தி கொடூரமாகக் கொலை செய்தார்.
கத்தியால் குத்தப்பட்ட ரஞ்சிதா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், கொலையாளி ரபீக் அங்கிருந்து தப்பி அருகில் இருந்த காட்டுப் பகுதிக்குச் சென்றார். அங்கு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது சடலத்தைக் காவல்துறையினர் மீட்டனர்.
ஒரே நாளில் நடந்த இந்தக் கொலை மற்றும் தற்கொலைச் சம்பவத்தால் அந்தப் பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது. உத்தர கன்னடா மாவட்டப் போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து, இந்தத் துயரச் சம்பவம் குறித்துத் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
