மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா, படுகை கிராமத்தைச் சேர்ந்த பாரதிராஜா (40) என்ற நபரை எட்டு பேர் கொண்ட கும்பல் தாக்கி, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் 18ஆம் தேதி நல்லாடை பகுதியில் உள்ள ஏடிஎம் அருகே பாரதிராஜா நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு கும்பல் அவரது ஊர் மற்றும் சாதி குறித்துக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது. பின்னர் கத்தியைக் காட்டி மிரட்டி அவரை அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு கடத்திச் சென்று, ஆடைகளைக் களைந்து ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தியதாக பாரதிராஜாவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். அதற்கு அவர் மறுத்ததால் சரமாரியாகத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அவரிடமிருந்து தப்பித்து பாரதிராஜா வீடு திரும்பியதாகவும் கூறப்படுகிறது.
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பாரதிராஜா, தனது உறவினர்களின் உதவியுடன் பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், நல்லாடை பகுதியைச் சேர்ந்த சரண் (26), செந்தமிழ்வாணன், ஐயப்பன், ஹரி, விஸ்வா, நந்தகுமார், சரவணகுமார் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய எட்டு பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதில் முதற்கட்ட நடவடிக்கையாக நல்லாடை தோப்புத் தெருவைச் சேர்ந்த சரண் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இருப்பினும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்கள் மீது காவல்துறையினர் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், குற்றத்தை மூடிமறைக்க முயல்வதாகவும் பாரதிராஜாவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். பாரதிராஜாவை அந்த கும்பல் துரத்திச் செல்லும் காட்சிகளும், தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்று அவரது குடும்பத்தினர் கண்ணீருடன் பேசும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்த வீடியோக்கள் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், காவல்துறையின் செயல்பாடுகள் மீதான விமர்சனங்களையும் எழுப்பியுள்ளன.
சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்தக் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு மயிலாடுதுறை காவல்துறையினர் தற்போது விளக்கம் அளித்துள்ளனர். போலீசாரின் விளக்கத்தின்படி, அந்தப் பகுதியில் பாலியல் குற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றும், ஏடிஎம் அருகே பாரதிராஜா அமர்ந்திருந்தபோது “யார் நீ? ஏன் இங்கு உட்கார்ந்திருக்கிறாய்?” என்று அங்கிருந்த இளைஞர்கள் கேட்டதால் ஏற்பட்ட சாதாரண வாக்குவாதமே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், குடும்பத்தினரின் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டும், போலீசாரின் மறுப்பும் இந்த விவகாரத்தில் பெரும் பரபரப்பைத் தொடர்ந்து நீடிக்கச் செய்துள்ளது.
