திருமணம் ஆகாத இளம் பெண் ஒருவர், தனக்கு மாதவிடாய் நின்றுவிட்டதாகக் கூறி மிகுந்த கவலையுடன் மருத்துவரை அணுகுகிறார். அப்போது அவரிடம் மருத்துவர், “யாருடனாவது உடல் ரீதியான உறவில் இருந்தீர்களா?” என்று கேட்க, அந்தப் பெண் கோபத்துடன், “நான் கல்லூரிக்குச் சென்று படிப்பைத் தவிர வேறு எதிலும் ஈடுபடவில்லை” என்று பதிலளிக்கிறார். உடனே மருத்துவர் அவரை சமாதானப்படுத்தி, இது போன்ற சூழலில் தேவையில்லாத பயம் வேண்டாம் என்றும், தற்போது இளம் பெண்களிடையே அதிகம் காணப்படும் பி.சி.ஓ.டி (PCOD) எனப்படும் சினைப்பை நீர்க்கட்டிப் பிரச்சனை இதற்கு முக்கியக் காரணமாக இருக்கலாம் என்றும் விளக்குகிறார்.
இந்த பி.சி.ஓ.டி பாதிப்பு இருந்தால், மாதவிடாய் சுழற்சி சீரற்றதாக மாறுவதுடன், உடல் எடை அதிகரித்தல், முகத்தில் தேவையற்ற முடி வளர்தல் மற்றும் முகப்பருக்கள் போன்ற அறிகுறிகள் தென்படும் என்றும் மருத்துவர் குறிப்பிடுகிறார். இதற்குத் தீர்வாக, துரித உணவுகளைத் தவிர்த்து, சத்தான புரத உணவுகளை உட்கொள்வது, தினமும் உடற்பயிற்சி மற்றும் போதிய உறக்கம் போன்ற வாழ்க்கைமுறை மாற்றங்கள் மிக அவசியம் என்று அறிவுறுத்துகிறார். முறையான கவனிப்பு மற்றும் தேவைப்பட்டால் மருந்துகள் மூலம் இதைக் குணப்படுத்த முடியும் என்றும், தொடர்ந்து 2 முதல் 3 மாதங்கள் மாதவிடாய் வராமல் இருந்தால் உடனடியாகப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது என்றும் மருத்துவர் அந்தப் பெண்ணிற்குத் தைரியம் கூறுகிறார்.
