ஒரு கிராமத்தின் தலையெழுத்தை மாற்றிய ஐந்து வருட தவம்… விநாயகம் பட்டி இளைஞர்களின் வெறித்தனம்… இந்தியாவே வியந்த சம்பவம்…!

By SATHISH R on ஆனி 27, 2026

Spread the love

ஒரு கிராமத்தின் கனவு நனவாகும் தருணம் எப்போதும் நெகிழ்ச்சியானது. அப்படிப்பட்ட ஒரு பெருமையான தருணம் புதுச்சேரி மாநிலம் விநாயகம்பட்டில் அரங்கேறியுள்ளது. ‘சுரக்ஷா சேவா சமூக அமைப்பு’ என்ற அமைப்பின் மூலம் பயிற்சி பெற்ற விநாயகம்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் இந்திய ராணுவத்திற்குத் தேர்வாகியுள்ளனர். நாட்டு எல்லையைக் காக்கும் உன்னதப் பணிக்குத் தேர்வாகியுள்ள இந்த இளைஞர்களுக்கு கிராம மக்கள் சார்பில் மிக பிரம்மாண்டமான பாராட்டு விழா நடத்தப்பட்டது.

இளைஞர்களை ராணுவத்திற்குத் தயார்படுத்திய பெருமை ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பிரகாசம் தலைமையில் செயல்பட்டு வரும் சுரக்ஷா சேவா சமூக அமைப்பையே சேரும். கடந்த ஐந்து ஆண்டுகளாக கிராமப்புற இளைஞர்களை அரசு பணிகளுக்குத் தயார்படுத்தும் உன்னதப் பணியில் இந்த அமைப்பு ஈடுபட்டு வருகிறது. உடற்தகுதி தேர்வு முதல் எழுத்துத் தேர்வு வரை முற்றிலும் இலவசமாக பயிற்சிகளை வழங்கி வரும் இந்த அமைப்பின் மூலம், இதுவரை சுமார் 65 இளைஞர்கள் காவல்துறை, தீயணைப்புத் துறை மற்றும் ராணுவம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் பணி வாய்ப்பைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

   

இந்த தொடர் முயற்சியின் அடுத்தகட்டமாக, 2026-ஆம் ஆண்டிற்கான இந்திய ராணுவ ஆட்சேர்ப்புத் தேர்வில் இந்த அமைப்பைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் சாதனை படைத்துள்ளனர். விநாயகம்பட்டைச் சேர்ந்த ஞானசந்தர், குயிலாப்பாளையத்தைச் சேர்ந்த ஆகாஷ், பிச்சவீரான்பேட்டைச் சேர்ந்த லோகேஷ் மற்றும் சோரப்பட்டைச் சேர்ந்த ஹரிஷ் ஆகியோரே இந்திய ராணுவத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள அந்த இளம் சிங்கங்கள் ஆவர். ஒரே பகுதியைச் சேர்ந்த நான்கு பேர் ஒன்றாக ராணுவத்திற்குத் தேர்வாகியுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

   

இதனை முன்னிட்டு விநாயகம்பட்டில் நடைபெற்ற பாராட்டு விழாவில், ராணுவ பணிக்குத் தேர்வான 4 இளைஞர்களுக்கும் நினைவுப் பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. விழாவில் பங்கேற்ற பெற்றோர்கள், “நாட்டுக்காக சேவை செய்ய எங்கள் பிள்ளைகள் செல்வது பெருமையாக உள்ளது; அவர்கள் சொந்த கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்” என்று உணர்ச்சிபூர்வமாகப் பேசியபோது ஒட்டுமொத்த அரங்கமும் நெகிழ்ச்சியில் ஆழ்ந்தது. மேடையில் கண்கலங்கிய பெற்றோர்களையும், கம்பீரமாக நின்ற ராணுவ வீரர்களையும் பார்த்த பொதுமக்கள் கைதட்டி தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். ஒரு கிராமத்தில் விதைக்கப்பட்ட கனவு, இன்று நான்கு ராணுவ வீரர்களாக மலர்ந்திருப்பது ஒட்டுமொத்த புதுச்சேரி மாநிலத்திற்கும் பெருமிதமான தருணமாக அமைந்துள்ளது.