சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு எதிரே கடந்த 25 ஆண்டுகளாக சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருட்களை தள்ளுவண்டியில் வியாபாரம் செய்து வருகிறார் மாலினி. தன் வாழ்வாதாரமாக விளங்கும் இந்தத் தொழிலின் மூலம் மருத்துவமனைக்கு வரும் குழந்தைகளை மகிழ்விக்கும் அவர், அந்த மழலைகளின் புன்னகையில் தன்னைப் பிரிந்து சென்ற தன் சொந்த மகனின் நினைவுகளைச் சுமந்து அன்றாடம் வாழ்ந்து வருகிறார்.
கடந்த 2013-ஆம் ஆண்டு மே மாதம் 23-ஆம் தேதி இதே பகுதியில் நடந்த ஒரு கோர விபத்து மாலினியின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமன் என்பவர் குடிபோதையில் அதிவேகமாக ஓட்டி வந்த கார் மோதியதில், மாலினியின் 13 வயது மூத்த மகன் முனிராஜ் பரிதாபமாக உயிரிழந்தான்; இளைய மகன் வாசு பலத்த காயங்களோடு உயிர் பிழைத்தான். இந்த வழக்கை விசாரித்த சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம், விபத்தை ஏற்படுத்திய நபருக்கு சமீபத்தில் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.
வறுமையான சூழலிலும் மற்றவர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவனாக முனிராஜ் இருந்துள்ளான். தன்னிடம் கிடைக்கும் சிறு தொகையைக் கொண்டு தனக்கு மட்டுமின்றி தன் உடன்பிறந்தவர்களுக்கும், அக்கம் பக்கத்து நண்பர்களுக்கும் தின்பண்டங்களை வாங்கிப் பகிர்ந்து கொடுக்கும் பரந்த மனம் கொண்டவன். எதிர்காலத்தில் படித்து பெரிய ஆளாகி தன் தாய்க்கு ஒரு சொந்த வீடு கட்டிக் கொடுப்பதாகக் கூறிய அந்தச் சிறுவனின் அன்பான வார்த்தைகள், மாலினியின் மனதை இன்றும் ஈரம் காயாமல் ரணமாக்கிக் கொண்டிருக்கின்றன.
