சிவகாசியில் இருந்து வீட்டு உபயோகப் பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த மினி லாரி ஒன்று, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது. லாரியை சிவகாசி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் ஓட்டி வந்த நிலையில், ஓட்டுநரின் திடீர் தூக்கக் கலக்கம் காரணமாக வாகனத்தின் கட்டுப்பாடு இழந்தது. இதனால் தாறுமாறாக ஓடிய மினி லாரி, சாலையோரம் இருந்த 20 அடி ஆழ பள்ளத்தில் திடீரென தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் மினி லாரியின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியதில், ஓட்டுநர் கார்த்திக் உட்பட அதில் பயணித்த 5 பேர் படுகாயமடைந்து இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உளுந்தூர்பேட்டை காவல்துறையினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பள்ளத்தில் கவிழ்ந்த லாரியை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
