கிருஷ்ணகிரி அருகே போக்சோ வழக்கில் சிக்கிய கால்பந்து பயிற்சியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த விஜி என்ற கால்பந்து வீரர், அப்பகுதி மாணவர்களுக்குப் பயிற்சியாளராகவும் செயல்பட்டு வந்துள்ளார். சமீபத்தில் விளையாட்டுப் போட்டிகளுக்காக மாணவர்களை வெளியூர்களுக்கு அழைத்துச் சென்றபோது, ஒரு சிறுவனுக்கு அவர் பாலியல் தொல்லை அளித்ததாகப் புகார் எழுந்தது.
இது தொடர்பாக சிறுவனின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் விஜி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அறிந்த விஜி, கடந்த சில நாட்களாகத் தலைமறைவாக இருந்தார். உறவினர்கள் அவரைத் தேடி வந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ரங்கசந்திரம் கிராமத்தில் ஒரு தனியார் நிலத்தில் உள்ள கண்டெய்னர் வீட்டின் பின்புறம் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இந்நிலையில் தகவல் அறிந்து வந்த தேன்கனிக்கோட்டை போலீசார், அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ஒரு விளையாட்டுப் பயிற்சியாளர் இத்தகைய புகாரில் சிக்கி உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
