தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதங்களை ஆளுநரிடம் சமர்ப்பித்து முறைப்படி ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர், நாளை மாலை 3:15 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் விழாவில் விஜய்யைப் புதிய முதலமைச்சராகப் பதவியேற்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 9 அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்பதை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் தவெக தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஊர் எங்கும் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வரும் தொண்டர்கள், இது ஒரு புதிய அரசியல் மாற்றத்தின் தொடக்கம் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர். சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நாளை நடைபெறும் பதவியேற்பு விழாவைக் காணப் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரளுவார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
