சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் அலுவலகம் அமைப்பதற்கான பணிகளை விரைவுபடுத்த அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. புதிய அலுவலகப் பணிகளை நிறைவு செய்யப் பொதுப்பணித்துறை கேட்டிருந்த 6 மாத கால அவகாசக் கோரிக்கையை நிராகரித்துள்ள அரசு, இப்பணிகளை 3 மாதங்களுக்குள் விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
இதற்காகப் பொதுப்பணித்துறைச் செயலாளர் சுந்தரவல்லி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அரசு குழுவில், தனியார் கட்டிட வடிவமைப்பாளர்களும் வாஸ்து நிபுணர்களும் இடம்பெற்றுள்ளனர். அரசின் இந்த அதிரடி மற்றும் விரைவான நடவடிக்கைகளின் மூலம் முதலமைச்சர் விஜய்யின் அலுவலகம் விரைவில் நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு இடமாற்றம் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.
