பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில், ஏற்கனவே பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், மீண்டும் கொடூரமாகத் தாக்கப்பட்டு வீட்டின் மாடியிலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டுள்ளார். திங்கட்கிழமை இரவு வீட்டின் கதவைத் திறக்க முற்பட்டபோது, அங்கு வந்த இரு நபர்கள் அவரை வலுக்கட்டாயமாக மொட்டை மாடிக்கு இழுத்துச் சென்று கீழே தள்ளியதாகத் தெரிகிறது. இதில் படுகாயமடைந்த அப்பெண், உடனடியாக சதார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவரது பாதுகாப்பிற்காகக் காவல்துறை கண்காணிப்பும் போடப்பட்டுள்ளது.
முன்பு தன்மீது கூட்டுப் பாலியல் தாக்குதல் நடத்திய நபரும், அவரது குடும்பத்தினரும்தான் இந்தச் செயலில் ஈடுபட்டதாகவும், தொடர்ந்து தனக்குக் கொலை மிரட்டல் விடுத்து வந்ததாகவும் பாதிக்கப்பட்டவர் வாக்குமூலம் அளித்துள்ளார். பழிவாங்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்த கூடுதல் தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
