மத்திய பிரதேச மாநிலம் மந்தசௌர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவரின் பையை, அப்பகுதியில் சுற்றி திரிந்த தெருநாய் ஒன்று கவ்விக்கொண்டு தப்பிச் சென்றுள்ளது. அந்தப் பையில் சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள தங்க, வெள்ளி நகைகள் மற்றும் ரூ.2,000 ரொக்கப் பணம் இருந்ததாகக் கூறப்படுகிறது. நகைப் பை காணாமல் போனது குறித்துத் தகவல் அறிந்த போலீசார் , மருத்துவமனையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது தெருநாய் பையைக் கவ்விச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அதனடிப்படையில் நாய் சென்ற பாதையைக் கண்டறிந்த போலீசார் , பையைத் தேடிப் பிடித்து அதிலிருந்த நகை மற்றும் பணத்தைப் பத்திரமாக மீட்டனர். பின்னர் மீட்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் உரிய உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டன.
