“தோண்ட தோண்ட அதிர்ச்சி…! 7,000 ஆண்டுகள் பழமையான.. 77 தலை இல்லாத எலும்புக்கூடுகள்… உலகையே உலுக்கிய கற்கால மர்மம்…!!”

By Swetha on ஆனி 17, 2026

Spread the love

ஸ்லோவாக்கியாவின் ‘வ்ராப்ளெ’ என்ற கற்கால குடியேற்றப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 7,000 ஆண்டுகள் பழமையான 77 தலை இல்லாத எலும்புக்கூடுகள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஆரம்பத்தில் இவை கொடூரமான இனப்படுகொலையாக இருக்கலாம் என்று கருதப்பட்டாலும், ஜெர்மனியின் ‘கீல் பல்கலைக்கழக’ விஞ்ஞானிகளின் புதிய ஆய்வு இந்த மர்மத்தை உடைத்துள்ளது. அந்த உடல்களில் போரினால் ஏற்படும் வன்முறைத் தழும்புகளோ, அவசர வெட்டுக் காயங்களோ இல்லை; மாறாக, மனித உடற்கூறியல் நன்கு தெரிந்த நபர்களால், இறந்த பிறகு மிகவும் திட்டமிட்டு, கவனமாக சடங்குகளின் பகுதியாகத் தலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த அகழ்வாராய்ச்சியின் மிகப்பெரிய மர்மம் என்னவென்றால், உடல்கள் கண்டெடுக்கப்பட்ட அகழியின் எந்தப் பகுதியிலும் துண்டிக்கப்பட்ட அந்த 77 தலைகள் கிடைக்கவே இல்லை. இதனால், அந்த ஆரம்பகால விவசாய சமூக மக்கள், மனிதர்களின் தலைகளுக்கு ஏதோ ஒரு விசேஷமான ஆன்மிக அல்லது குறியீட்டு முக்கியத்துவம் இருப்பதாக நம்பியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அந்தத் தலைகளை அவர்கள் தனியாக வேறு எங்குமாவது பாதுகாத்து வைத்திருக்கலாம் அல்லது தங்களின் வழிபாட்டுச் சடங்குகளுக்குப் பயன்படுத்தியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

   

மேலும், அங்குள்ள எலும்புக்கூடுகள் சாதாரணமாகப் புதைக்கப்படாமல், சில குப்புறக் கிடந்த நிலையிலும், சில ஜோடி ஜோடியாகவும் மிகவும் விசித்திரமான கோணங்களில் புதைக்கப்பட்டுள்ளன. இந்த விசித்திரமான அடக்க முறை, கற்கால ஐரோப்பாவின் இறப்பு மற்றும் இறுதிச்சடங்கு வழிமுறைகள் குறித்து உலக வரலாற்றாசிரியர்கள் இதுவரை கொண்டிருந்த கணிப்புகளையே முற்றிலும் தலைகீழாக மாற்றியுள்ளது.