திருமணம் செய்ய மறுத்த பெண்ணை, காதலனின் தம்பி கத்தியால் குத்தி படுகொலை செய்த கொடூர சம்பவம் பெங்களூருவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எச்.ஏ.எல் சாலையில் உள்ள கோடிஹள்ளி பகுதியில், கடந்த ஜூலை 13 அன்று மாலை 4:30 மணியளவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த 22 வயதான 4-ஆம் ஆண்டு சட்டக் கல்லூரி மாணவி அம்ருதா, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, 48 மணி நேரத்திற்கும் மேலாக உயிருக்குப் போராடி வந்த நிலையில், கடந்த ஜூலை 15 மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒரே பகுதியைச் சேர்ந்த அம்ருதாவும், தனுஷ் என்பவரும் ஆன்மீகக் கூட்டங்கள் மூலம் பழகி, பின்னர் காதலித்து வந்துள்ளனர். ஆனால், தனுஷிற்கு ஏற்கனவே திருமணமாகி, விவாகரத்து பெற்று ஒரு குழந்தை இருக்கும் விஷயம் அம்ருதாவிற்கு தெரியவந்ததால், ஏமாற்றமடைந்த அவர் தனுஷுடனான காதலை முறித்துக் கொண்டு அவரை விட்டு விலகியுள்ளார்.
https://twitter.com/HateDetectors/status/2077635478522872118/photo/1
தன் அண்ணனின் காதலை அம்ருதா நிராகரித்ததால் ஆத்திரமடைந்த தனுஷின் தம்பியான சூர்யா, அம்ருதாவை சும்மா விடமாட்டேன் என்று மிரட்டியுள்ளார். இந்த நிலையில், கடந்த ஜூலை 13 அன்று அம்ருதாவின் வீட்டிற்குச் சென்ற சூர்யா, அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது மறைத்து வைத்திருந்த கத்தியால் அம்ருதாவின் நெஞ்சு மற்றும் முதுகுப் பகுதியில் கொடூரமாகக் குத்திவிட்டு தப்பியோட முயன்றார். அங்கிருந்த பொதுமக்கள் சூர்யாவைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அம்ருதா பரிதாபமாக உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஜே.பி.நகர் (JB Nagar) போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றியுள்ளனர். குற்றவாளிகளான தனுஷ் மற்றும் சூர்யா ஆகிய இருவரையும் கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
