உத்தரப் பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டம் ஜஸ்வந்த்நகர் அருகே உள்ள நக்லா பகத் கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞர் அங்குஷ் யாதவ், கடந்த 20 நாட்களாகக் கடுமையான திகில் சம்பவத்தை கூறி வருகிறார். இவர் செல்லும் இடமெல்லாம் ஒரு பெரிய கருநாகப் பாம்பு துரத்தி வந்து தீண்டுவதாக அதிர்ச்சி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கடந்த 20 நாட்களில் மட்டும் அந்தப் பாம்பு இவரை 6 முறை கடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனது அத்தை வீட்டிற்குச் சென்றபோதும், அங்கு வந்த அதே கருநாகப் பாம்பு இவரைத் தீண்டியுள்ளது. இதனால் நிலைகுலைந்து போன குடும்பத்தினர் இவரை மருத்துவமனையில் அனுமதித்து ஆண்டி-ஸ்னேக் வெனம் ஊசி செலுத்திச் சிகிச்சை அளித்துள்ளனர்.
திங்கள்கிழமை மாலையும் இவருக்கு ஆறாவது முறையாகப் பாம்புக்கடி ஏற்பட்டு, காலில் உணர்வின்மை மற்றும் மயக்கம் அடைந்ததால் எட்டாவா அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதைக் கண்டு மருத்துவர்களும் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். “இது உண்மையான பாம்புக்கடியா அல்லது ‘ஸ்னேக் பைட் போபியா’ எனப்படும் மன ரீதியான பயப் பிரமையா?” என்ற கோணத்தில் மருத்துவர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். தொடரும் இந்த விசித்திரச் சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் பீதியில் உறைந்துள்ளனர்.
