இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களூருவில், தொழில்நுட்பம் சார்ந்த சுவாரசியமான சம்பவங்கள் நிகழ்வது வழக்கம். அந்த வகையில், இந்திரா நகரிலிருந்து கோரமங்களா வரை பயணித்த ஹேமந்த் சர்மா என்ற பயணியின் அனுபவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது பயணம் முடிந்ததும், ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவதற்காக ஆட்டோ ஓட்டுநரிடம் அவர் க்யூஆர் கோடு கேட்டுள்ளார்.
வழக்கமாக ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோவின் பின்னால் ஒட்டப்பட்டிருக்கும் க்யூஆர் கோடை காண்பிப்பார்கள் அல்லது காகிதத்தில் அச்சிடப்பட்ட அட்டையைத் தருவார்கள். ஆனால், இந்த ஆட்டோ ஓட்டுநர் எந்த ஒரு காகிதத்தையும் எடுக்காமல், மிகவும் ஸ்டைலாகத் தனது கையை உயர்த்தி, தான் அணிந்திருந்த ஸ்மார்ட்வாட்ச் திரையைக் காட்டியுள்ளார். அவர் தனது ஸ்மார்ட்வாட்ச் திரையிலேயே கூகுள் பே க்யூஆர் கோடை செட் செய்து வைத்திருந்ததைக் கண்டு அந்தப் பயணி வியந்துபோனார்.
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய ஆட்டோ ஓட்டுநரின் இந்தத் தனித்துவமான யோசனையை வியந்த பயணி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார். இதைப் பார்த்த சமூக ஊடகப் பயனர்கள், “ஸ்மார்ட்வாட்சை மிகச் சரியாகப் பயன்படுத்தியுள்ளார்”, “பெங்களூரு ஆட்டோ ஓட்டுநர்கள் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கே சவால் விடுகிறார்கள்” என்று பாராட்டி வருகின்றனர். இந்த அசத்தலான ‘பீக் பெங்களூரு’ தருணம் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது.
