“மைனஸ் 8°C குளிர்” குளித்துவிட்டு குழாயை மூட மறந்த பெண்… காலையில் எழுந்ததும் காத்திருந்த அதிர்ச்சி.. குடியிருப்பு பகுதியையே பனிச்சறுக்கு மைதானமாக மாறிய காட்சி…!!

By Soundarya on மாசி 5, 2026

Spread the love
சீனாவின் கன்சு மாகாணம் லான்ஜோவில், பெண் ஒருவர் செய்த ஒரு சிறிய தவறு அந்த குடியிருப்பு பகுதியையே பனிச்சறுக்கு மைதானமாக மாற்றிய வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜனவரி 16 அன்று இரவு குளித்து முடித்த வாங் என்ற பெண், தனது வீட்டின் சோலார் வாட்டர் ஹீட்டர் குழாயை அணைக்க மறந்துவிட்டார். அன்று இரவு வெப்பநிலை மைனஸ் 8°C ஆகக் குறைந்த நிலையில், சுமார் ஒன்பது மணி நேரமாகத் தொட்டியிலிருந்து வெளியேறிய நீர், அப்பகுதி முழுவதும் வழிந்தோடி உறையத் தொடங்கியது.
மறுநாள் காலை 6 மணியளவில் வாங்கின் தந்தை உடற்பயிற்சிக்காக வெளியே வந்தபோது, சாலைகள் அனைத்தும் அடர்த்தியான பனிக்கட்டியால் மூடப்பட்டு, ஒரு பெரிய ஸ்கேட்டிங் ரிங்க் போல மாறியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். முதலில் வேறு எங்கிருந்தோ தண்ணீர் வருவதாக நினைத்த அவர், பின்னர் அது தனது வீட்டிலிருந்துதான் கசிந்தது என்பதை உணர்ந்தார். இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அண்டை வீட்டாருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்து வாங் வீடியோ ஒன்றை வெளியிட்டு பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.