அண்ணாமலை புலிகள் காப்பகத்தின் அடிவாரத்தில் ஆயிரக்கணக்கான ‘செஸ்ட்நட் ஹெடட் பீ-ஈட்டர்’ (Chestnut-headed Bee-eater) பறவைகள் கூட்டமாகச் சேர்ந்து வானில் பறந்தபடி இசைப்பது போன்ற சத்தத்தை எழுப்பும் அபூர்வ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வனவிலங்கு புகைப்படக் கலைஞர் ஸ்ரீராம் முரளி பதிவு செய்த இந்த அழகிய காட்சியை ஐஏஎஸ் அதிகாரி சுப்பிரியா சாஹூ தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் பறவைகள் தங்களின் பாதுகாப்புக்காகவும், வேட்டையாடுவதற்காகவும் ஒரு குழுவாக இணைந்து செயல்படுவதை இது உணர்த்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் காட்சியின் பிரமிப்பை கண்டு வியந்த நெட்டிசன் ஒருவர், இது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதோ என ஐயம் எழுப்பினார். அதற்குப் பதிலளித்த சுப்பிரியா சாஹூ, இது முற்றிலும் இயற்கையானது என்றும் புகைப்படக் கலைஞரின் கடின உழைப்பை மதிக்க வேண்டும் என்றும் விளக்கமளித்தார். சுற்றுப்புறச் சூழலில் பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்தப் பறவைகளின் குழு உணர்வு, மனிதர்களுக்கு ‘ஒற்றுமையே பலம்’ என்ற பாடத்தைக் கற்றுக்கொடுப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
