இந்தோனேசியாவில் உள்ள பங்க தீவுப் பகுதியில், கடந்த 89 ஆண்டுகளாக அறிவியல் உலகத்தின் பார்வையில் படாமல் மறைந்திருந்த உலகின் ஒரே விஷமுள்ள மனிதக் குரங்கு இனம் தற்போது மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் மட்டுமே இயங்கக்கூடிய, மிகவும் கூச்ச சுபாவம் கொண்ட இந்த சிறிய வகை பாலூட்டி இனம் முற்றிலுமாக அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட நிலையில், தற்போது இது உயிரோடு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது விஞ்ஞானிகளிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பார்க்க மிகவும் அழகாகவும் பொம்மை போலவும் தோற்றமளிக்கும் இந்த விலங்கு, பாலூட்டி இனங்களிலேயே தனித்துவமான விஷத்தன்மை கொண்டதாகும். தனக்கு ஆபத்து ஏற்படும் போது தனது முழங்கைக்கு அருகில் உள்ள சுரப்பியிலிருந்து வரும் திரவத்தை உமிழ்நீருடன் கலந்து, எதிரிகள் மீது விஷமாகப் பாய்ச்சும் திறன் கொண்டது. மனிதர்களை இது கடித்தால் கடுமையான வலி, வீக்கம் மற்றும் ஒவ்வாமை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அழிவின் விளிம்பில் உள்ள இந்த அரிய குரங்கு இனம் மனிதர்களின் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் தோட்டங்களுக்கு அருகில் சுற்றித் திரிந்தபோது கண்டறியப்பட்டுள்ளது. மின்சாரக் கம்பிகள் மற்றும் சாலை விபத்துகள் போன்ற பல்வேறு ஆபத்துகளால் பாதிக்கப்பட்டு வரும் இந்த விலங்குகளைப் பாதுகாக்க வனவிலங்கு மீட்பு மையங்கள் உதவிகளைச் செய்து வருகின்றன. இருப்பினும், இந்த இனம் முழுமையாக அழியாமல் காக்க நீண்டகாலத் திட்டங்களும் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளும் அவசியமென ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
