திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள முத்தூர் ஊராட்சிப் பகுதிகளில், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் இலவச ஆபரண தயாரிப்பு தொழிற்பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. 18 முதல் 50 வயதுக்குட்பட்ட கிராமப்புற பெண்கள் சொந்த ஊரிலேயே சுயதொழில் தொடங்கி வருமானம் ஈட்ட இந்த வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
தங்க நகைகளுக்கு மாற்றாகக் கவரிங் நகைகளுக்கு சந்தையில் அதிக தேவை உள்ளதைக் கருத்தில் கொண்டு, 14 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில் இலவச உணவு, சீருடை, மூலப்பொருட்கள் மற்றும் பயிற்சிக்கான உபகரணங்கள் அனைத்தும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன. பயிற்சி முடிவில் மதிப்பீட்டுத் தேர்வு நடத்தப்பட்டு, அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்களும் வழிகாட்டுதல்களும் வழங்கப்படும்.
பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு மாவட்ட தொழில் மையம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி மூலமாக மானியத்துடன் கூடிய வங்கிக் கடன்களைப் பெறுவதற்கும் முழுமையான வழிகாட்டுதல்கள் அளிக்கப்படும். தகுதியுள்ள கிராமப்புற பெண்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் தங்களது ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் அடையாளச் சான்றுகளுடன் நெல்லை மகாராஜா நகரில் உள்ள ஐஓபி ஆர்செட்டி அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
