இந்தி சினிமா பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த தமிழ் ரசிகர்களை தமிழ் பாடல்கள் பக்கம் திருப்பியவர் இளையராஜா என்றால், இந்தி ரசிகர்களையும் தமிழ் சினிமா பாடல்களைக் கேட்க வைத்தவர் ஏ ஆர் ரஹ்மான் என்று சொல்வார்கள்.
தான் அறிமுகமான ரோஜா திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இந்தியா முழுவதும் ஹிட்டடித்தன. அதன் பின்னர் ரஹ்மான் மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகியோரோடு இணைந்து பணியாற்றிய படங்களின் பாடல்கள் எல்லாம் இந்தியா முழுவதும் வைரல் ஹிட்டாகின. பாடல்களுக்காகவே சில பாடல்கள் ஹிட்டாகின என்பதும் குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகியோர்தான் அந்த காலத்தில் ரஹ்மானின் பாடல்களை மிகச்சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டனர் என்றால் அது மிகையாது. அதன் பின்னர் இந்தி சினிமா, ஹாலிவுட் மற்றும் உலக சினிமா என அடுத்தடுத்து அவரின் வளர்ச்சி உயர்ந்து கொண்டே சென்றது.
ரஹ்மான் தன்னுடைய முதல் படமான ‘ரோஜா’வுக்காக தேசிய விருது வாங்கிய போது அவரது வயது 26தான். தன்னுடைய 15 ஆவது வயதில் இருந்து அவர் பல இசையமைப்பாளர்களிடம் இசைக் கலைஞராகப் பணியாற்றியுள்ளார். ரஹ்மான் 30 ஆண்டுகளாக கோடம்பாக்கத்தில் உள்ள வீட்டில்தான் வசித்து வருகிறார். அதே வீட்டில்தான் அவரின் ரெக்கார்டிங் ஸ்டுடியோவும் உள்ளது.
வழக்கமாக சினிமா பிரபலங்கள் வளர்ந்து வந்ததும் கோடம்பாக்கத்தை விட்டுவிட்டு போயஸ் கார்டன் மற்றும் கிழக்குக் கடற்கரை சாலை போன்ற எலைட்டான ஏரியாக்களுக்கு சென்றுவிடுவார்கள். ஆனால் ரஹ்மான் மட்டும் அப்படி செல்லாததன் காரணத்தை ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.
அதில் “எந்த ஏரியாவுக்கு சென்றாலும் எனனால் வெளியே நடமாட முடியாது. அது மட்டுமில்லாமல் இந்த ஏரியாவில் இருந்து ஏர்போர்ட் பக்கமாக உள்ளது. அதனால் சீக்கிரமாக சென்றுவிடலாம். மேலும் இந்த வீட்டின் மேல் ஒரு எமோஷனல் ஒட்டுதலும் இருக்கிறது. ஏனென்றால் எங்க அப்பா வாங்கிய இடத்தில் என் அம்மா கட்டிய வீடு இது” எனக் கூறியுள்ளார்.