நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுக்கு எதிராகப் புனேயில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் போது வைக்கப்பட்ட விசித்திரமான பதாகை ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் சிலர், சியா கோயலால் மட்டுமே நரேந்திர மோடியைச் சரிசெய்ய முடியும் மற்றும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானைக் குறிப்பிடும் வகையிலான பதாகைகளைப் பிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புனேயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கேட்டன் அகர்வால் கொலை வழக்கில் முக்கியக் குற்றம் சாட்டப்பட்டவர்தான் இந்தச் சியா கோயல் ஆவார். நாட்டின் தற்போதைய கல்விப் பிரச்சனைகள் மற்றும் அமைப்பின் வீழ்ச்சியை அரசிடம் உணர்த்துவதற்காக, மக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்ற இந்தச் சம்பவத்தையும் நபரின் பெயரையும் கிண்டலாகவும் நகைச்சுவையாகவும் பயன்படுத்தியதாகப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
நீட் தேர்வு குளறுபடிகள், கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வெடித்துள்ள மாணவர் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே இப்போரணி நடைபெற்றது. மழைக்கு இடையிலும் அமைதியான முறையில் நடைபெற்ற இந்த பேரணியில், மத்திய கல்வி அமைச்சரின் ராஜினாமாவைக் கோரியும், கல்வி அமைப்பின் வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தியும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
