உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் ராஜாஜிபுரம் பகுதியில், பைக் ஓட்டிச் சென்ற சீருடை அணிந்த நபர் ஒருவர் மீது அங்குள்ள தெரு நாய்கள் குரைத்துள்ளன. இதனால் ஆத்திரமடைந்த அவர், பைக்கை நிறுத்தி தனது தோளில் இருந்த துப்பாக்கியை எடுத்து அதில் தோட்டாவை நிரப்பி, தெரு நாய் ஒன்றை நோக்கிச் சுட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த அந்த நாய் சாலையிலேயே துடிதுடித்து உயிரிழந்தது. இந்த கொடூரச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இணையத்தில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விலங்குகள் நல ஆர்வலர்கள் அளித்த புகாரின் பேரில், விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் லக்னோ போலிஸார் வழக்குப் பதிவு செய்து, அத்துப்பாக்கிச் சூடு நடத்திய நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
