தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள தேக்கம்பட்டி மாவட்டச் சிறையிலிருந்து 17 விசாரணைக் கைதிகள் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரத்தில் கைதி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டது போன்று நாடகமாடிய அவர்கள், அங்கு பணியில் இருந்த நான்கு சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டுத் தப்பியோடினர். காயமடைந்த காவலர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தப்பியோடிய கைதிகளைப் பிடிக்க 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டது. மேலும், நக்சல் தடுப்பு சிறப்புப் பிரிவினரும் இதில் இணைக்கப்பட்டு, சிறையைச் சுற்றியுள்ள வனப்பகுதிகள், மலைப்பகுதிகள் மற்றும் தமிழக-கேரள எல்லைப் பகுதிகளான குமுளி, கம்பம், போடிமெட்டு உள்ளிட்ட இடங்களில் வாகன சோதனைகளும் தீவிர கண்காணிப்புகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்த தீவிர தேடுதல் நடவடிக்கையின் பலனாக, பிரவீன், சிலம்பரசன், ராஜ்குமார் மற்றும் ராஜா சிக்கந்தர் ஆகிய நான்கு கைதிகள் அடுத்தடுத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரும்பாலான கைதிகள் மதுரையைச் சேர்ந்தவர்கள் என்றும், இரவுப் பணியில் குறைந்த எண்ணிக்கையிலான காவலர்கள் இருந்ததை சாதகமாகப் பயன்படுத்தி அவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டுத் தப்பியுள்ளதாகவும் தெரிவித்த காவல்துறையினர், எஞ்சிய கைதிகளையும் விரைவில் பிடித்துவிடுவோம் எனக் கூறியுள்ளனர்.
