உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா கேன்ட் ரயில் நிலையத்தில் நொடிக் கவனக்குறைவால் பயணியின் உயிருக்கே ஆபத்தாக முடிந்த நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. பிளாட்ஃபார்மில் இருந்து புறப்பட்ட சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறுவதற்குப் பயணி ஒருவர் அவசர அவசரமாக முயன்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக கால் வழுக்கி, ரயிலுக்கும் பிளாட்ஃபார்மிற்கும் இடையே உள்ள குறுகிய இடைவெளியில் அவர் நிலைகுலைந்து விழுந்தார். ஓடும் ரயிலின் வேகத்தில் அந்தப் பயணி சுமார் 50 மீட்டர் தூரம் வரை தண்டவாள ஓரத்தில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார். இதைக் கண்டு பிளாட்ஃபார்மில் இருந்த பயணிகள் அலறித் துடித்தனர்.
உடனடியாகச் சமயோசிதமாகச் செயல்பட்டு ரயில் நிறுத்தப்பட்டதால், அந்தப் பயணி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஏற்கனவே இதே சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த மாதம் பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்த சம்பவமும், பீகாரைச் சேர்ந்த சிறுவர்கள் கடத்தல் முறியடிக்கப்பட்ட சம்பவமும் நடந்த நிலையில், தற்போது இந்த பயங்கர விபத்து அரங்கேறி ரயில்வே வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
