தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கீடு செய்ததைத் தொடர்ந்து, அக்கட்சியின் தொண்டர்கள் மாநிலம் முழுவதும் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தவெக தலைவர் விஜய்யின் அதிகாரப்பூர்வ ‘X’ (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தின் முகப்புப் படம் (Cover Photo) மாற்றப்பட்டுள்ளது. புதிய படத்தில் விசில் சின்னம் பிரதானமாக இடம்பெற்றுள்ளதோடு, ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற எழுத்துகளில் ஏற்கனவே உள்ள சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களுடன், கூடுதலாகப் பல நிறங்கள் கலந்த வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
வழக்கமாக சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களை மட்டுமே அடையாளமாகக் கொண்டு வந்த தவெக, தற்போது இந்தப் புதிய நிறங்களைப் பயன்படுத்தியிருப்பது பல்வேறு அரசியல் யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது. இந்த நிறமாற்றம் கட்சியின் புதிய அரசியல் நிலைப்பாட்டை அல்லது உள்ளடக்கிய வளர்ச்சியைக் குறிக்கிறதா என்பது குறித்து அக்கட்சி சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை. இருப்பினும், தேர்தல் நெருங்கும் வேளையில் தவெக-வின் ஒவ்வொரு சிறிய அசைவும் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்த ‘மல்டி கலர்’ டிசைன் அரசியல் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
