2026 ஜனவரி முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்கள், நகைக் கடன் பெறும் முறையில் முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன. இதன்படி, நகையை அடகு வைக்கும் போது அதன் மதிப்பைக் கணக்கிட புதிய முறை பின்பற்றப்படுகிறது. முந்தைய 30 நாட்களின் சராசரி தங்கம் விலை அல்லது முந்தைய நாளின் இறுதி விலை ஆகிய இரண்டில் எது குறைவாக உள்ளதோ, அந்த விலையை அடிப்படையாகக் கொண்டே வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இனி கடன் தொகையை நிர்ணயிக்கும். ரிசர்வ் வங்கியின் (RBI) இந்த நடவடிக்கை கடன் வழங்குவதில் கூடுதல் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்கிறது.
இந்த புதிய கணக்கீட்டு முறையால், தங்கம் விலையில் ஏற்படும் திடீர் மாற்றங்களின் தாக்கம் குறைக்கப்படும். இருப்பினும், குறைவான விலை அடிப்படை அளவாக எடுத்துக்கொள்ளப்படுவதால், வாடிக்கையாளர்கள் தங்களது நகைகளுக்கு இதுவரை பெற்று வந்த கடன் வரம்பில் சிறிய அளவில் குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. நகைக்கடன் பெறத் திட்டமிடும் வாடிக்கையாளர்கள், தற்போதைய சந்தை நிலவரத்தை விட இந்த 30 நாள் சராசரி விலையைக் கருத்தில் கொள்வது அவசியமாகும்.
