துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெற்று வரும் நேட்டோ நாடுகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் இடையேயான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் வர்த்தக கப்பல்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டிய நிலையில், சமீபத்தில் 3 வர்த்தக கப்பல்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்கா 80-க்கும் மேற்பட்ட இடங்களில் கடுமையான வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதற்குப் பதிலடியாக ஈரானும் பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்களைக் குறிவைத்துத் தாக்கத் தொடங்கியதால் இருநாடுகளிடையே போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
பத்திரிகையாளர் சந்திப்பில் ஈரானுடனான ஒப்பந்த முறிவு குறித்துப் பேசிய அதிபர் டிரம்ப், ஈரானுடன் இனி எந்தவிதமான பேச்சுவார்த்தையோ அல்லது ஒப்பந்தமோ செய்வது என்பது வெறும் நேர விரயம் என்று கோபமாகத் தெரிவித்துள்ளார். “ஈரான் ஆட்சியாளர்கள் வக்கிரமான மற்றும் கொடூரமான வன்முறை குணம் கொண்டவர்கள், அவர்களிடம் அணு ஆயுதம் இருந்திருந்தால் இந்நேரம் அதைப் பயன்படுத்தியிருப்பார்கள்” என்று மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடிய டிரம்ப், என்னைப் பொறுத்தவரை ஈரானுடனான டீல் முற்றிலும் முடிந்துவிட்டது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். டிரம்பின் இந்த ஆக்ரோஷமான அறிவிப்பு, வரும் நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையேயான ராணுவ மோதலை மேலும் தீவிரமாக்கும் என்பதைக் காட்டுகிறது.
இந்தத் திடீர் போர் நிறுத்த ரத்தானது சர்வதேச அளவில் பெரும் பொருளாதாரப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. அமெரிக்காவின் தொடர் தாக்குதல்களுக்குப் பயந்து, உலக வர்த்தகத்தில் முக்கியப் பாதையாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மீண்டும் மூட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அவ்வாறு ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டால், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலை சர்வதேச சந்தையில் கடுமையாக எகிறும் என்றும், இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு உலகப் பொருளாதாரம் ஸ்தம்பிக்கக்கூடும் என்றும் வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
