அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் ஜாக்சன்வில்லே பகுதியில் உள்ள மோட்டார் வாகனப் பிரிவு அலுவலகத்திற்கு வெளியே பயங்கரச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இரு குழந்தைகள் காரின் பின் இருக்கையில் இருக்க, அந்நிய நபர் ஒருவர் திடீரென காரைக் கடத்திச் செல்ல முயன்றுள்ளார். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் காரைத் தடுத்து நிறுத்த முயன்றபோது, ஓட்டுநர் காரை வேகமாக இயக்கியதில் தாயும் ஒரு குழந்தையும் பார்க்கிங் மைதானத்தில் பல அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டனர்.
இதைக் கண்ட அங்கிருந்த 15-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் எதைப் பற்றியும் யோசிக்காமல் உடனடியாக ஓடிவந்து காரைச் சுற்றி வளைத்துத் தாயையும் குழந்தைகளையும் பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும், காரின் எண்களை உடனடியாகக் காவல்துறையினருக்குத் தெரிவித்ததன் மூலம், அன்றைய தினமே யன்னி ஹியூமன் (26) என்ற நபரைக் காவல்துறையினர் கைது செய்தனர். ஆபத்தான சூழ்நிலையில் பொதுமக்கள் காட்டிய இந்த மாபெரும் மனிதநேயமும் துணிச்சலும் தற்போது உலகளவில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
