மகாராஷ்டிராவின் தானே மாவட்டம், பிவண்டி பகுதியில் கடந்த செப்டம்பர் 13 அன்று திருமணமான பெண் ஒருவர் துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டதாக காவலர் சைலேஷ் பாட்டீல் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. நரேந்திர பவார் ஆகிய இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவலரே இத்தகைய குற்றத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் உள்ளூர் நீதிமன்றம், முன்னாள் எம்.எல்.ஏ. நரேந்திர பவார் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை அண்மையில் நிராகரித்து உத்தரவிட்டது. மேலும், துறை ரீதியான விசாரணையைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட காவலர் சைலேஷ் பாட்டீலை காவல் துறையின் மூத்த அதிகாரிகள் ஏற்கனவே பணியிலிருந்து அதிரடியாக நீக்கம் செய்துள்ளனர்.
இந்நிலையில், வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சைலேஷின் தாய், தன் மகன் செய்த குற்றத்திற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என வெளிப்படையாகக் கோரிக்கை விடுத்துள்ளார். பெற்ற தாயே தன் மகனின் கொடூர செயலைக் கண்டித்து அவருக்குத் தூக்கு தண்டனை கேட்கும் நிகழ்வு, சமூகத்தில் பெரும் பரபரப்பையும், அதேவேளையில் நீதிக்கான முக்கியத் திருப்புமுனையையும் ஏற்படுத்தியுள்ளது.
