ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த ஆயர்பாடி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுலகிருஷ்ணன் (19), அதே பகுதியைச் சேர்ந்த நட்சத்திரா (18) என்ற பெண்ணை கடந்த 2 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார்.
நேற்றிரவு கோகுலகிருஷ்ணன் தனது காதலியைச் சந்திக்க அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த நட்சத்திராவின் தாய் முகமது தமீம், தன் மகளிடம் பேசுவதை நிறுத்துமாறு கூறியுள்ளார். அதற்கு கோகுலகிருஷ்ணன் நட்சத்திராவைத் தனக்குத் திருமணம் செய்து தருமாறு கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முகமது தமீம், வீட்டிற்குள் சென்று எண்ணெயைக் காயவைத்து எடுத்து வந்து கோகுலகிருஷ்ணனின் முகத்தில் ஊற்றியுள்ளார்.
இதில் பலத்த தீக்காயமடைந்து அலறிய கோகுலகிருஷ்ணனை மீட்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக வாலாஜா அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையிலும் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து காவேரிப்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
