சிமெண்ட் கல்லில் 11 மாத குழந்தையின் தலையை அடித்து கொன்ற கொடூர தாய்… கிணற்றில் காத்திருந்த அதிர்ச்சி… பின்னணியில் இருந்த திடுக்கிடும் காரணம்…!

By Nanthini on சித்திரை 12, 2026

Spread the love

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், தனது மறுமண வாழ்விற்கு தடையாக இருப்பான் என்ற காரணத்திற்காக 11 மாதக் குழந்தையை தாயே கொலை செய்த கொடூரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 22 வயது பெண், கடந்த மார்ச் 8-ஆம் தேதி தனது மகனின் தலையை சிமெண்ட் மேடையில் அடித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், குழந்தையின் உடல் மிதக்காமல் இருப்பதற்காக ஒரு பையில் கற்களை நிரப்பி, அதனை அருகில் இருந்த கிணற்றில் வீசிவிட்டு, எவ்வித தடயமும் இன்றி தலைமறைவாகியுள்ளார்.

குழந்தையைக் கொன்ற பிறகு, அந்தப் பெண் தனது வீட்டிலிருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஷிரூர் பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு தனக்கு குழந்தை இருப்பதை மறைத்து, ஒரு திருமண முகவர் மூலம் வேறொருவரை மறுமணம் செய்துகொண்டு புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார். இதற்கிடையில், அந்தப் பெண் மற்றொரு ஆணுடன் இருக்கும் புகைப்படத்தைக் கண்ட அவரது முதல் கணவர், தனது மகனைத் திருப்பித் தருமாறு அவரிடம் கேட்டுள்ளார். ஆனால், அந்தப் பெண் முறையான பதில் அளிக்காமல் தவிர்த்ததால், சந்தேகமடைந்த தந்தை ஏப்ரல் 5 அன்று ரஞ்சன்காவ்ன் எம்.ஐ.டி.சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

   

இன்ஸ்பெக்டர் மகாதேவ் வாக்மோட் தலைமையிலான தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில், ஷிரூர் தாலுக்காவில் இருந்த அந்தப் பெண்ணை பிடித்து விசாரித்தனர். தொடக்கத்தில், குழந்தை தவறி விழுந்து இறந்ததாகக் கூறி நாடகமாடிய அவர், போலீஸாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டார். சுற்றுலா சென்றபோது குழந்தை தொடர்ந்து அழுததால் ஏற்பட்ட விரக்தி மற்றும் தனது இரண்டாவது திருமணத்திற்கு குழந்தை தடையாக இருப்பான் என்ற எண்ணமே இந்த கொலைக்குக் காரணம் என்று அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

   

போலீஸார் அவர் அடையாளம் காட்டிய கிணற்றில் இருந்து குழந்தையின் உடலை மீட்டனர். முதல் கணவர் கொடுத்த புகாரின் பேரில், தற்போது அந்தப் பெண் மீது பாரதிய நியாய சம்ஹிதா (BNS) சட்டத்தின் கீழ் கொலை (பிரிவு 103) மற்றும் ஆதாரங்களை மறைத்தல் (பிரிவு 238) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெற்ற தாயே தனது சுகவாழ்விற்காகப் பிஞ்சு குழந்தையைத் தீர்த்துக்கட்டிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.