இமாச்சலப் பிரதேச மாநிலம் பங்ரோட்டு பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் ஆதரவின்றி வசித்து வந்த பிரமீலா, சுமார் 35 ஆண்டுகளாகத் தனது குடும்பத்தைப் பிரிந்து தவித்து வந்துள்ளார். காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் அம்மாநில அரசின் ‘அப்னோ தக்’ என்ற திட்டத்தின் கீழ், ஸ்மிரிதிகா நேகி என்பவர் பிரமீலாவைச் சந்தித்து உரையாடியுள்ளார். அப்போது பிரமீலா தனது பழைய ஒடிசா நினைவுகளைப் பகிர்ந்துகொண்டதுடன், அவரது கையில் ஒடிசா மொழியில் பச்சை குத்தப்பட்டிருந்ததையும் அதிகாரிகள் கவனித்தனர். இந்த முக்கியத் தடயங்களைக் கொண்டு அவர் ஒடிசாவைச் சேர்ந்தவராக இருக்கலாம் என அதிகாரிகள் உறுதி செய்தனர்.
இந்தத் தகவலின் அடிப்படையில் ஒடிசா மாநிலக் காவல்துறையினரின் உதவியுடன் நடத்தப்பட்ட தேடுதலில், பிரமீலாவின் குடும்பத்தார் ஒடிசாவில் உள்ள கேந்திரபாரா என்ற ஊரில் வசிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 35 நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு முதியோர் இல்லத்தில் இருக்கும் பிரமீலாவிடம் அவரது குடும்பத்தினர் வீடியோ அழைப்பின் மூலம் நெகிழ்ச்சியுடன் பேசினர். கையில் இருந்த ஒரு சிறிய பச்சைக் குத்தல் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு குடும்பத்தை ஒன்றிணைக்க உதவியுள்ள நிலையில், பிரமீலாவை விரைவில் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
