சிங்கப்பூரில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில், அருகில் வாஷ்பேசின் வசதி இருந்த போதிலும் சாப்பிடும் மேசையிலேயே வாடிக்கையாளர் ஒருவர் கைகழுவித் தரையை அழுக்காக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. சிங்கப்பூரில் உள்ள ‘டிகே சிக்னேச்சர்ஸ்’ உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் தனது உணவைச் சாப்பிட்டுவிட்டு, சில அடிகள் தள்ளி இருந்த வாஷ்பேசினுக்குச் செல்லாமல் தான் அமர்ந்திருந்த மேசையிலேயே கையில் தண்ணீரைக் ஊற்றிக் கழுவியுள்ளார்.
இதனால் தரை முழுவதும் தண்ணீர் சிந்தி அழுக்கான நிலையில், உணவக ஊழியர் ஒருவர் துடைப்பத்துடன் வந்து அந்த இடத்தை சுத்தம் செய்துள்ளார். ஆனால், அந்த நபரும் அவருடன் வந்த பெண்ணும் ஊழியரைக் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த காட்சி இணையத்தில் வைரலானது. இந்தச் சம்பவத்தின் வீடியோவை உணவகம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, “உணவகத்தில் கை கழுவுவதற்காக வாஷ்பேசின் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
https://www.instagram.com/reel/DfE71pPBJqP/?utm_source=ig_web_copy_link&obrf=NTc4MTIwNjQ2YQ==
உணவருந்தும் மேசைகளில் கை கழுவுவது சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துவதுடன், மற்றவர்கள் வழுக்கி விழும் அபாயத்தையும் உயர்த்துகிறது” என்று குறிப்பிட்டு அடிப்படை நாகரீகத்தைப் பின்பற்றுமாறு வாடிக்கையாளர்களுக்கு அன்புடன் கோரிக்கை விடுத்துள்ளது. உணவக ஊழியர்களைக் கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்றும், பொது இடங்களில் நடந்துகொள்ளும் முறை குறித்தும் நெட்டிசன்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
