கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி பகுதியில் கள்ளக்காதலியுடன் தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பிய விவகாரத்தில், கூலித் தொழிலாளி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஞ்செட்டியைச் சேர்ந்த 36 வயது பெண் ஒருவர், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 8 ஆண்டுகளாகத் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் கிருஷ்ணகிரி அருகே சமையல் வேலைக்குச் சென்றபோது, அங்கு திம்மசந்திரத்தைச் சேர்ந்த குமரேசன் (54) என்ற தொழிலாளியுடன் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த நிலையில், அந்தப் பெண்ணுக்குத் தெரியாமல் குமரேசன் தனது செல்போனில் அவர்களின் அந்தரங்கக் காட்சிகளை வீடியோவாகவும் புகைப்படமாகவும் எடுத்துள்ளார். இதனிடையே, அவர்களுக்கிடையிலான தொடர்பை அந்தப் பெண் துண்டித்துக் கொண்டதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த குமரேசன், தன்னிடம் இருந்த அந்தரங்க வீடியோக்களை அந்தப் பெண்ணின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பிப் பழிவாங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் அஞ்செட்டி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார்.
பெண்ணின் புகாரைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பியது மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து, குமரேசன் மற்றும் அவருக்கு உதவியதாகச் சொல்லப்படும் சபீர் (42), ஜமுனா (38) ஆகிய மூன்று பேரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தனிப்பட்ட விரோதம் காரணமாக ஒரு பெண்ணின் அந்தரங்கத்தை பொதுவெளியில் கசியவிட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
