“நீ எனக்கு மட்டும் தான் சொந்தம், இல்லனா செத்துரு”…. இளம்பெண்ணை நடுரோட்டில் துடிதுடிக்க…. வாலிபர் செய்த உச்சக்கட்ட கொடூரம்….!

By Nanthini on பங்குனி 15, 2026

Spread the love

புதுச்சேரி நேதாஜி நகரைச் சேர்ந்த ஷர்மிளா என்ற இளம்பெண், ஒருதலைக் காதல் வெறியால் கொடூரமான முறையில் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தனியார் ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஷர்மிளாவை, வாணரப்பேட்டையைச் சேர்ந்த ஜோசப் என்பவர் கடந்த ஒரு மாதமாகவே பின்தொடர்ந்து காதலிக்குமாறு கட்டாயப்படுத்தி வந்துள்ளார். ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற ஜோசப்பின் தொல்லைகளைப் பொறுக்க முடியாமல், அவர் மீது ஷர்மிளா காவல் நிலையத்தில் புகாரும் அளித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த ஷர்மிளாவை, அண்ணா சிலை அருகே வழிமறித்த ஜோசப் மீண்டும் வற்புறுத்தியுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஷர்மிளா மீது ஊற்றி ஜோசப் தீ வைத்துள்ளார். உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில், வலியால் துடித்தபடி ஷர்மிளா சுமார் 100 அடி தூரம் ஓடிச் சென்று கீழே விழுந்துள்ளார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

   

சுமார் 80 சதவீத தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடி வந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொடூர சம்பவத்தை அடுத்து, குற்றவாளி ஜோசப்பை ஒதியஞ்சாலை காவல்துறையினர் உடனடியாக கைது செய்தனர். முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் தடயங்களைச் சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

   

பெண் ஒருவரின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல் நிலையத்தில் புகார் அளித்தும், இத்தகைய கொடூரமான சம்பவம் நிகழ்ந்திருப்பது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல் நிலையம் அருகிலேயே இச்சம்பவம் நடந்திருப்பது, சட்டம்-ஒழுங்கு குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளது. குற்றவாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.