மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த ஆதித்யா சிகர்வார் என்பவரின் கார் சமீபத்தில் இணையத்தில் பேசுபொருளாக மாறியது. வெளிநாடுகளில் பிரபலமான ஒரு சமூக வலைதள ட்ரெண்டைப் பின்பற்றி, ஆதித்யாவின் காதலி அவரது கார் முழுவதும் சுமார் 3,400 லிப்ஸ்டிக் முத்தங்களை தொடர்ச்சியாக 4 மணி நேரம் செலவிட்டு பதித்துள்ளார். வித்தியாசமான தோற்றத்துடன் சாலைகளில் வலம் வந்த இந்த காரை ஆச்சரியத்துடன் பார்த்த பொதுமக்கள், அதனைப் புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர்ந்தனர். மக்களின் கவன ஈர்ப்பால் இது குறுகிய நேரத்திலேயே சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வைரலானது.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவலானதைத் தொடர்ந்து, போக்குவரத்துத்துறையினரின் கவனத்திற்கும் இது சென்றது. புகைப்படங்களில் தெளிவாகத் தெரிந்த வாகனப் பதிவு எண்ணை வைத்து ஆதித்யாவைத் தொடர்புகொண்ட காவல்துறையினர், காரைப் பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். வாகனத்தின் தோற்றத்தை மாற்றி போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக அவருக்கு ரூ.5,500 அபராதமும் விதிக்கப்பட்டது. தனது தவறை உணர்ந்து ஆதித்யா சம்மதம் தெரிவித்ததையடுத்து, கார் மீது இருந்த அனைத்து முத்தத் தழும்புகளும் கழுவி அழிக்கப்பட்டு வாகனம் மீண்டும் பழைய நிலைக்கே மாற்றப்பட்டது. காதலை வெளிப்படுத்த செய்த இந்த நூதன முயற்சி, இறுதியில் அவருக்கு அபராதத்தைப் பெற்றுத் தந்துள்ளது.
