உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில், 29 வயதேயான இளம் ரயில்வே ஊழியர் ஒருவர் டீ குடித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜான்சியின் சித்ரா சௌராஹா பகுதியில் உள்ள ஒரு தேநீர் கடையில் இந்தச் சோகம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த நபர் ரயில்வே துறையில் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவத்தன்று அந்த வாலிபர் வழக்கம்போல தேநீர் கடைக்கு வந்து டீ வாங்கி அருந்திக் கொண்டிருந்தார். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் திடீரென அவர் நிலைகுலைந்து தரையில் விழுந்தார். இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதி, அவருக்கு முதலுதவி அளிக்க முயற்சி செய்தனர். சுமார் மூன்று நிமிடங்கள் அவர் உயிருக்குப் போராடிய நிலையில், அங்கிருந்தவர்கள் அவரை மீட்கப் போராடியும் பலனில்லாமல் போனது.
View this post on Instagram
பின்னர் அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. ஆரோக்கியமாக இருந்த இளைஞர் ஒருவர் டீ குடித்த அடுத்த வினாடியே உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் பகீரையும் ஏற்படுத்தியுள்ளது.
