காரைக்குடி சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளராக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். 2026 தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படாத சூழலிலும், காரைக்குடியில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகக் கட்சி மேலிடம் கருதுகிறது. இதன் காரணமாகவே, அங்கு அண்ணாமலை நேரடியாகக் களமிறக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது பூத் மற்றும் வார்டு வாரியாகத் தீவிர மக்கள் சந்திப்புகளை நடத்தி வரும் அண்ணாமலை, அடித்தட்டு மக்களின் ஆதரவைத் திரட்டுவதில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், அத்தொகுதியின் முக்கியச் சமுதாயத் தலைவர்களுடன் தனிப்பட்ட முறையில் ஆலோசனைகளை மேற்கொண்டு, சமூக ரீதியான ஆதரவை உறுதிப்படுத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார். அண்ணாமலையின் இந்த நியமனம், காரைக்குடி தொகுதியைக் கைப்பற்ற பாஜக மேற்கொண்டு வரும் ஒரு முக்கிய வியூகமாகப் பார்க்கப்படுகிறது.
