தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக விஜய் களத்தில் இறங்கிய பிறகு தமிழக தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகவே உள்ளது. அதிலும் விஜயின் தமிழக வெற்றிக்கழக கட்சியில் அதிமுகவின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் இணைந்த பிறகு மாற்று கட்சியினர் பலரும் கட்சி தாவி வருகிறார்கள். குறிப்பாக அதிமுகவில் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை டார்கெட் செய்து செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தி கட்சியில் இணைத்து வருகின்றார்.
இந்நிலையில் தவெகவில் இணைந்த வேகத்தில் பலரும் அடுத்தடுத்து விலகி வருவது அக்கட்சி தலைமையை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக கோவையில் தவெகவில் இணைந்த சிலர் நேற்று இரவு, எஸ்பி வேலுமணி முன்னிலையில் தங்களை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த செங்கோட்டையன், தவெகவில் இருந்து அடுத்தடுத்து வெளியேறுவதற்கான காரணத்தை ஆராயத் தொடங்கியுள்ளாராம். நேற்று முன்தினம் அதியமான் விசிகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.