“அப்பாடா.. இனிமே தான் ஆட்டமே ஆரம்பம்!”… அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு அடித்த ஜாக்பாட்… அமலாக்கத்துறை வழக்கு அதிரடி ரத்து…!!!

By Muthu Mani on சித்திரை 28, 2026

Spread the love

2008-ம் ஆண்டு திமுக ஆட்சியில் வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, திருவான்மியூரில் வீட்டுமனைகளை ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாகக் கூறி 2012-ல் அதிமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. அப்போதைய ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு விதிகளை மீறி இட ஒதுக்கீடு செய்ததாக எழுந்த இந்தப் புகாரை அடுத்து, 2020-ல் அமலாக்கத் துறையும் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.

இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறை தொடர்ந்த பிரதான வழக்கை ஏற்கனவே விசாரித்த சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும், இந்த ஒதுக்கீட்டில் முறையான குற்றச்சதியோ அல்லது அரசுக்கு நிதி இழப்போ ஏற்படவில்லை எனக் கூறி அந்த வழக்கை முழுமையாக ரத்து செய்திருந்தன. இதன் அடிப்படையில், அடிப்படை குற்றச்சாட்டு (Predicate Offence) ரத்து செய்யப்பட்டுவிட்டதால், அதன் கிளை வழக்காகத் தொடரப்பட்ட அமலாக்கத் துறை வழக்கும் செல்லாது என அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

   

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு, மூத்த வழக்கறிஞர்களின் வாதங்களை ஏற்றுக் கொண்டது. லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கே இல்லாத நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கு நிலைக்கத்தக்கதல்ல என்று கூறி, அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான அந்த வழக்கை ரத்து செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதன் மூலம் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்த முறைகேடு புகாரில் இருந்து அமைச்சருக்குப் பெரிய நிம்மதி கிடைத்துள்ளது.