மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டம் சௌரியா கிராமத்தில், நேற்று (டிசம்பர் 21, 2025) நள்ளிரவில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சௌரியா கிராமத்தில் உள்ள ஒரு குடிசை வீடு நள்ளிரவில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. தீ மளமளவென பரவியதால் வீட்டிற்குள் இருந்தவர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர்.இந்த விபத்தில் 72 வயதான துர்ஜோதன் டோலு, அவரது மகன், மருமகள் மற்றும் 15 வயது பேத்தி ஆகிய நான்கு பேரும் வீட்டிற்குள்ளேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். நள்ளிரவில் இந்தத் தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து உள்ளூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
