மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் வெள்ளிக்கிழமை காலை நிகழ்ந்த ஒரு கோர ரயில் விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காலை 7 மணி அளவில் மாணவர்கள் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது, அசிம்கஞ்ச்-கட்வா தடத்தில் உள்ள ஒரு ரயில்வே கடவுப்பாதையை (Level Crossing) பள்ளி வாகனம் கடக்க முயன்றுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக வந்த பயணிகள் ரயில் ஒன்று அந்த வாகனத்தின் மீது பலமாக மோதியது. இந்த பயங்கர விபத்தில் இரண்டு பள்ளி மாணவர்கள் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த சமயத்தில் ரயில்வே கேட் திறந்திருந்ததே இந்த விபத்திற்குக் காரணம் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கோர விபத்தினால் அப்பகுதியில் ரயில் சேவை தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டது. விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த மூத்த காவல்துறை மற்றும் ரயில்வே அதிகாரிகள், விபத்துக்கான காரணம் குறித்தும், அங்கு பணியில் இருந்த கேட்மேனின் அலட்சியம் குறித்தும் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் சுகாந்தா மஜும்தார், குழந்தைகளின் உயிரிழப்பு நெஞ்சை உலுக்குவதாகவும், இதுகுறித்து ரயில்வே துறை சார்பில் முறையான விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
