மும்பைக்கு அருகிலுள்ள விரார் மேற்கு, குளோபல் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதை அடுத்து, அக்கம்பக்கத்தினர் உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு வசித்து வந்த தீபக் மன்சுக்லால் மேத்தா, அவரது தம்பி குமார் மன்சுக்லால் மேத்தா மற்றும் தங்கை கேவ்னா மன்சுக்லால் மேத்தா ஆகிய மூன்று பேரும் அழுகிய நிலையில் சடலமாகக் கிடந்தது கண்டறியப்பட்டது.
போலீசாரின் விசாரணையில், உயிரிழந்த குமார் மன்சுக்லால் மேத்தா தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்ததும், அவரது மருத்துவச் செலவுகளுக்குப் போதிய நிதி இல்லாமல் அக்குடும்பம் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்ததும் தெரியவந்தது. உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் உதவி கேட்டும் போதிய பணம் கிடைக்காததால், மிகுந்த மனவேதனைக்கும் விரக்திக்கும் ஆளான குடும்பத்தினர் கூட்டாக இந்த விபரீத முடிவை எடுத்துள்ளனர்.
சிகிச்சைக்குப் பணமின்றி வாழ்க்கையை முடித்துக் கொள்ளத் தீர்மானித்த இவர்கள், எலி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து மூன்று உடல்களையும் மீட்ட காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
