கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள ‘யுனிலைட்’ எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும் கஞ்சா போதையில் வந்த ஒரு கும்பல் கொடூரமான முறையில் ரகளையில் ஈடுபட்டு ஊழியர்களைத் தாக்கியுள்ளது.
காலை முதலே ஷோரூமிற்கு வந்து தொலைக்காட்சிப் பெட்டியின் விலையைக் குறைத்துத் தருமாறு அக்கும்பல் மிரட்டி வந்துள்ளது. அதற்கு ஊழியர்கள் மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் ஷோரூம் வாசலிலேயே அமர்ந்து மது அருந்தியுள்ளனர். பின்னர் மாலையில் மீண்டும் உள்ளே புகுந்து ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த மோதலின் போது ஷோரூமில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவரைப் படிக்கட்டுகளிலிருந்து கீழே தள்ளிவிட்டு கொடூரமாகத் தாக்கியுள்ளனர். மேலும், ஷோரூமின் பிரம்மாண்ட கண்ணாடிகள் மீது பெரிய கற்களை வீசிச் சேதப்படுத்த முயன்றுள்ளனர். பொதுமக்கள் இதைப் படம்பிடித்துச் சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில், கே.ஆர்.புரம் போலிஸார் வழக்குப் பதிவு செய்து போதை ஆசாமிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
