பயணிகள் வெயிட்டிங்… டிரைவர் ஈட்டிங்… காதணி விழா கறி விருந்துக்காக அரசுப் பேருந்தையே கடத்திய ஓட்டுநர்… நடுரோட்டில் நின்ற பஸ்… ராமேஸ்வரத்தில் பரபரப்பு…!

By Visaka on ஆடி 10, 2026

Spread the love

ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டிய அரசுப் பேருந்தின் ஓட்டுநர் ஒருவர், தனது சொந்தக் காரணத்திற்காகப் பேருந்தை மாற்றுப் பாதையில் இயக்கி, நடுரோட்டில் சாவியோடு நிறுத்திவிட்டு கறி விருந்து சாப்பிடச் சென்ற சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட அந்தப் பேருந்தை, அதன் வழக்கமான தடத்தில் இயக்காமல், பேக்கரும்பு பகுதிக்கு ஓட்டுநர் தனியாக எடுத்துச் சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற ஒரு காதணி விழாவில் கலந்துகொண்டு, சுடச்சுட கறி விருந்து சாப்பிடுவதற்காகவே அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களின் போக்குவரத்திற்குப் பயன்பட வேண்டிய அரசுப் பேருந்தை, விதிகளை மீறி மாற்று வழித்தடத்தில் இயக்கியதோடு மட்டுமின்றி, பேக்கரும்பு பகுதியில் சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலாக நடுரோட்டிலேயே சாவியுடன் அவர் நிறுத்தி வைத்துள்ளார். கறி விருந்தை நிதானமாகச் சாப்பிட்டுவிட்டு, அவர் சாவகாசமாக நடந்து வரும் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது. இந்த அலட்சியப் போக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநர் மீது துறை ரீதியான கடுமையான விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.