இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் ஒரு டம்ளர் வெந்நீர் குடிக்கும் பழக்கம், நமது உடலுக்குப் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தருகிறது. பொதுவாகவே வெந்நீர் அருந்துவது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும் என்றாலும், இரவில் குடிப்பது செரிமான மண்டலத்திற்கு மிகுந்த நன்மையளிக்கிறது. குறிப்பாக, இரவில் உணவை சற்று அதிகமாகச் சாப்பிட்டாலோ அல்லது கடினமான உணவை உட்கொண்டாலோ, ஒரு குவளை வெந்நீர் அருந்துவது உணவை எளிதில் செரிமானம் செய்ய உதவும். இதனால் வயிறு உப்புசம், வயிற்று வலி மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் கட்டுப்படுத்தப்பட்டு, மறுநாள் காலையில் வயிறு சுத்தமாகவும் இலகுவாகவும் இருக்கும்.
செரிமானப் பிரச்சனைகளைத் தாண்டி, உடலின் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி மன அழுத்தம் மற்றும் பதற்றத்தைக் குறைப்பதிலும் வெந்நீர் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதனால் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் இரவில் வெந்நீர் குடித்துத் தூங்கினால் ஆழ்ந்த நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியும். மேலும், பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அடிவயிற்று வலியிலிருந்து நல்ல நிவாரணம் தருவதுடன்; சளி, இருமல், தொண்டை வலி மற்றும் மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் இரவில் வெந்நீர் குடிப்பது ஒரு சிறந்த இயற்கை தீர்வாக அமைகிறது.
