திருவொற்றியூர் கடற்கரையில் நண்பர்களுடன் கடலில் குளித்தபோது, 19 வயது கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்தவர் திருவொற்றியூர், சிவசக்தி நகரைச் சேர்ந்த டேமியன் சுனில் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை, டேமியன் சுனில் தனது ஆறு நண்பர்களுடன் சேர்ந்து பொழுதுபோக்கிற்காக திருவொற்றியூர் கடற்கரைக்குச் சென்றுள்ளார். அனைவரும் கடலில் இறங்கி உற்சாகமாகக் குளித்துக் கொண்டிருந்த வேளையில், எதிர்பாராதவிதமாக எழுந்த ஒரு பலத்த அலையில் டேமியன் சுனில் சிக்கிக் கொண்டார்.
அலையின் சீற்றத்தில் நிலைகுலைந்த அவர், கண்ணிமைக்கும் நேரத்தில் தண்ணீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டார். உடன் வந்த நண்பர்கள் அவரைக் காப்பாற்ற முயன்றும் பலனளிக்கவில்லை. இந்தச் சம்பவம் குறித்துத் தகவலறிந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
