உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள சிகாரா பகுதியில் அமைந்துள்ள சஞ்சய் சிட்டி மாடல் பள்ளியில் பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு, தரத்தரவென இழுத்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளி நிர்வாகம் மற்றும் பேருந்துடன் தொடர்புடைய நபர்களால் இந்த பெண் தாக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.
பள்ளியில் படித்து வரும் சிறு குழந்தைகளின் கண்முன்னேயே அந்தப் பெண்ணைக் கீழே தள்ளி மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். சுற்றிலும் பலர் நின்று கொண்டிருந்தபோதிலும், யாரும் அந்தப் பெண்ணைக் காப்பாற்ற முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. தவறு யார் மீது இருந்தாலும், பள்ளி வளாகத்தில் குழந்தைகள் முன்னிலையில் ஒரு பெண்ணை இவ்வாறு கொடூரமாகத் தாக்குவது ஏற்றுக் கொள்ள முடியாதது எனப் பொதுமக்கள் மற்றும் இணையவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து உள்ளூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
